கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் மீது பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 294 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதியும், நிறைவு கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று (மார்ச்.25) விஜய்வர்கியா கூறுகையில், “மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள்மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எங்கள் கட்சித் தொண்டர் அமித் சர்கார் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். ஒருவரைக் கொன்று அவரைத் தூக்கிலிடுவது ஒன்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு புதிதல்ல.
ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், ஹேமதாபாத் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) தேபேந்திரநாத் ராய் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டார்” என்றார். ஹேமதாபாத் சட்டப்பேரவை உறுப்பினர் தேபேந்திரநாத் ராய் கடந்தாண்டு ஜூலை மாதம் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தில் தனது சாவுக்கு இருவர் காரணம் என எழுதப்பட்டிருந்தது.
இது திட்டமிட்ட கொலை என பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை ஆளும் தரப்பு மறுத்து வருகிறது. முன்னதாக இந்தக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தியது நினைவுகூரத்தக்கது.