பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா திருவிழா இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தற்போது வரை உத்தரகண்ட் மாநிலத்தில் 12 ஆயிரத்து 484 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் கும்பமேளாவை நடத்தும் அமைப்புகளில் ஒன்றான ஜூனா அகராவைச் சேர்ந்த ஸ்வாமி அவ்தேஷானந்த் கிரி, ஆச்சர்யா மஹாமன்டலேஷ்வர் ஆகியோரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். அத்துடன் சாதுக்களின் உடல் நலம் குறித்தும் விசாரித்ததோடு, கரோனா தொற்று பரவலின் அடையாளமாக கும்பமேளா விழா இருந்துவிடக்கூடாது என்பதையும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கும்பமேளா விழாவை இன்றுடன் (ஏப்.17) முடித்துக்கொள்வதாக ஜூனா அகரா அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் கும்பமேளாவை நடத்து மற்ற அகரா அமைப்புகளான பைராகி, திகம்பர், நிர்வாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உலகப் புகழ் பெற்ற கும்பமேளா நிகழ்வின் முதல் புனித நீராடல் மஹா சிவராத்திரி நாளான மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாவது புனித நீராடல் நடைபெற்றதன. நான்காவது புனித நீராடலான ஷாகி ஸ்னானம் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்னதாக, மஹா நிர்வாண அகரா அமைப்பின் தலைவர் கபில் தேவ், மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூட் பகுதியிலிருந்து கும்பமேளாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ஷாகி ஸ்னானம், கங்கா ஸ்னானம் ஆகியவை இந்த ஆண்டு ஹரித்வாரில் நடைபெற இருந்தது. இவை ஏப்ரல் 1 முதல் 30 வரை நிகழ்கிறது. அத்துடன் நான்கு மாத காலம் நடைபெறும் கும்பமேளா திருவிழா கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒரு மாத காலம் மட்டுமே நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 2,34,692 பேருக்கு கரோனா பாதிப்பு