டெல்லி: துருக்கியில் சிரியா எல்லையையொட்டிய காஜியன்டப் நகரில் கடந்த 6ஆம் தேதி அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தின.
இருநாடுகளிலும் அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இருநாடுகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பிணங்கள் மீட்கப்படுகின்றன.
இந்த பேரழிவில் இரு நாடுகளிலும் இதுவரை சுமார் எட்டாயிரம் பேர் பலியானதாக தெரிகிறது. நேற்றுவரை 6,000ஐ கடந்திருந்த பலி எண்ணிக்கை இன்று(பிப்.8) ஏழாயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் 2,032 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட இருநாடுகளுக்கும் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. நேற்று முதற்கட்டமாக துருக்கிக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. இந்த நிலையில், மீட்புப் பணிக்காக இரண்டு மீட்புக் குழுவினரை இந்தியா துருக்கிக்கு அனுப்பியுள்ளது.
இதில் மொத்தம் 101 பேரிடர் மீட்புப்படை வீரர்கள் மற்றும் மோப்ப நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த குழுவில் ஜூலி, ரோமியோ, ஹனி, ராம்போ ஆகிய நான்கு பயிற்சி அளிக்கப்பட்ட திறன்வாய்ந்த மோப்ப நாய்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட இந்த நாய்கள் மீட்புப்பணிகளில் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புக்குழுவினரும் நேற்று விமானம் மூலம் துருக்கி சென்றதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - 2 நாட்களில் நான்காவது முறை!