கொல்லம் (கேரளா): கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் ஒருபுறம் படித்த பெண்களே வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை முடிவுக்குச் செல்வதும், மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை கணவர் குடும்பத்தார் தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்குவதும் நடைபெற்றுவருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்ற பெண் 2020 மே 7ஆம் தேதி பாம்பு கடித்த நிலையில் பெற்றோர் வீட்டில் இறந்துகிடந்தார். இது குறித்து அவரின் கணவர் சூரஜிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
முதல் முயற்சி தோல்வி
உத்ராவை திருமணம் செய்த வங்கி ஊழியரான சூரஜ், உத்ராவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய், 100 பவுன் நகை, நிலம், புதிய கார் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளவும், வேறு திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தபோதும், தனது மனைவி உத்ராவை சூரஜ் கொல்ல நினைத்துள்ளார்.
அடூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அணலி வகை பாம்பைக்கொண்டு கடிக்கவைத்து உத்ராவை சூரஜ் கொலை செய்ய முதலில் முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த உத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பினார்.
நாக தோஷம் மீது பழிபோட்ட கணவர்
சிகிச்சைக்குப் பின்னர் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை சூரஜ் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்ற நல்ல பாம்பைக் கொண்டு உத்ராவைக் கடிக்கவைத்துள்ளார்.
உத்ரா இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். மனைவியைக் கொன்றபிறகு நாக தோஷம் காரணமாக அவர் பாம்பு கடித்து இறந்துள்ளதாக மற்றவர்களை நம்பவைக்க இவ்வாறு செய்துள்ளார்.
இந்த வழக்கை கேரளா மாநில கொல்லம் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சூரஜுக்கு பாம்பு கொடுத்த சுரேஷ் என்பவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மொத்தம் 87 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 288 ஆவணங்கள், 48 பிரமாண பத்திரங்களும் தாக்கல்செய்யப்பட்டன.
பாம்பை பட்டினி போட்டு...
பாம்பைக் கொண்டு கடிக்கவைப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக சூரஜ் இணையதளத்தில் தேடிய ஆதாரங்களும் கொல்லம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதிலும், சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்து தன் மனைவி உத்ராவை கடிக்க வைத்துள்ளது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1.7 செ.மீ. இருக்கும்.
அதன் தலையைப் பிடித்து கடிக்கவைத்தால் பற்களுக்கு இடையேயான இடைவெளி 2.8 செ.மீ. வரை இருக்கும் எனச் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக குளத்துப்புழா அரிப்பாவில் உள்ள வனத் துறை பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
தண்டனை அறிவிப்பு
மேலும் உத்ராவை கடித்த பாம்பின் உடற்கூராய்வு முடிவில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்ததும் கண்டறியப்படுள்ளது.
வழக்கு விசாரணைக்குப் பிறகு, சூரஜ் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்ரா கொலை வழக்கு: பாம்பின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க முடிவு!