உத்தரகாசி : பாஜக தேசியத் தலைவர் ஜெயப் பிரகாஷ் நட்டா உத்தரகாசியில் இரண்டு நாள்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். முன்னதாக அவர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “இன்று, காங்கிரஸ் தலைவர்கள் கங்கா ஆரத்தி எடுக்கிறார்கள். இந்த மக்கள்தான் அன்று ராமர் கோயில் கட்டுமானத்துக்கு இடையூறாக இருந்தார்கள்.
சுத்தம் சுகாதாரம் குறித்து அண்ணல் காந்தியடிகள் பேசினார்கள். செங்கோட்டையை சுத்தம் செய்ததன் மூலம் காந்தி அடிகளின் கனவை பிரதமர் நரேந்திர மோடி நினைவாக்கியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து உத்தரகாசி நகரை, “வீரம் விளைந்த பூமி” என நட்டா புகழாரம் சூட்டினார். மேலும், “மாநிலத்தில் உள்ள பாஜக அரசாங்கம் பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டது. ரூ.5.22 லட்சம் செலவில் இஸாட் கார் (Izzat Ghar) கட்டப்பட்டுள்ளது. நாடு முழுக்க 10 கோடி பேருக்கு விலையில்லாத சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3.65 லட்சம் பேர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைக்கு பிப்.10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேச தேர்தல்- சமாஜ்வாதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு