கோவா: சகப்பெண் பணியாளரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தெஹல்கா பத்திரிகையின் நிறுவனரும், முன்னாள் தலைமை ஆசிரியருமான தருண் தேஜ்பால், கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இவரின் கோரிக்கையை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தபோது, வழக்கை கோவா நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்வழக்கின் விசாரணை கோவாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்தநிலையில், அவ்வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
"கடந்த ஏழரை ஆண்டுகளாக, இந்தப் போலியான குற்றச்சாட்டால் தொழில்முறையாகவும், தனிப்பட்ட வாழ்கையிலும் கடும் பேரழிவைச் சந்தித்தேன். அரசியல் அமைப்பை மதித்து கோவா நீதிமன்ற விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைத்தேன்.
இதுபோன்ற ஒரு வழக்கில் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கத்தின் ஒவ்வொரு விதிமுறைகளையும் நிலைநிறுத்த நாங்கள் முயற்சி செய்துள்ளோம்" என நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து தேஜ்பால் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வழக்கு!