டெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் தனது பணி முடித்து வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி சாகேத் நீதிமன்றம் 15 ஆண்டு விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி, பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கார் விபத்தில் இறந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், தடயவியல் துறை சௌமியா தலையில் துப்பாக்கி குண்டடிபட்டு இறந்ததாகத் தனது அறிக்கையில் தெரிவித்தது.
பின்னர் போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு வாகனத்தில் வந்த நபர்கள், சௌம்யாவை துரத்தி துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. சிசிடிவி கேமரா சௌம்யா கொலை வழக்கில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முக்கிய பங்கு வகித்தது. அந்த சிசிடிவி வீடியோவில் மெரூன் நிற காரை ஒரு வண்டியில் சில நபர்கள் துரத்துவது தெரிந்தது.
மார்ச் 2009இல் போலீசார் சந்தேகத்தின் பேரில் ரவி கபூர், அமித் சுக்லா ஆகிய இருவரைக் கைது செய்தனர். இந்த இருவரும் கால் செண்டர் நபர் ஜிகிஷா கோஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சௌம்யா மற்றும் ஜிகிஷாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் ஜூன் 2010இல் ரவி கபூர், அமித் சுக்லா மற்றும் சந்தேகத்தின் பேரில் பல்ஜீத் மாலிக், அஜய் குமார், அஜய் சேதி உள்ளிட்டோர் மீது பத்திரிக்கையாளர் சௌம்யா கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
பின்னர் நவம்பர் 16, 2010இல் சாகேத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி குண்டுகள், சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை தடயவியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. பத்திரிக்கையாளர் சௌம்யா கொலை வழக்கில் சட்டச் சிக்கல்கள் காரணமாகத் தீர்ப்பு பலமுறை மாற்றியமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்து 15 வருடங்கள் கழித்து, சாகேத் நீதிமன்றம் இன்று பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் வழக்கில் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கான தீர்ப்பு விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் போதையில் போலீசாரை ஆபாச வார்த்தை பேசி, தாக்கிய பெண் மீது வழக்கு!