ஜேஇஇ என்னும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர முடியும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் இந்தத் தேர்வு நடப்பாண்டு (2021) நான்கு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சம வாய்ப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வில் பங்கேற்று சமமான வாய்ப்பைப் பெறுவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு இந்தாண்டு முதல் பல்வேறு மொழிகளில் நடத்தப்படுகிறது.
மொத்தமாக 7.09 லட்சம் பேர் இந்தத் தேர்வு எழுத பதிவுசெய்திருந்தனர். 334 நகரங்களில் அமைக்கப்பட்ட 915 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர்.
இத்தேர்வு இந்தியாவைத் தவிர பஹ்ரைன், கொலம்போ, துபாய், காத்மாண்டு, ரியாத், ஷார்ஜா, கோலாலம்பூர், தோஹா, லகோஸ், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட 12 பெருநகரங்களிலும் 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை nta.ac.in, ntaresults.nic.in மற்றும் jeemain.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வில் 17 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வுகள் முறையே பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நடந்தன. கரோனா காரணமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை நடந்து முடிந்தன.
நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது. அனைத்துத் தேர்வுகளும் நடந்த பின்னர், மாணவர்களின் தரவரிசை வெளியிடப்படும்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புக் குழு!