பெங்களூரு: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் சகோதரர் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட மஞ்சு தோல்வியடைந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒரே ஒரு எம்பியாக பிரஜ்வல் ரேவண்ணா இருந்தார்.
இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலின்போது பிரஜ்வல் ரேவண்ணா சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, பிரஜ்வல் ரேவண்ணாவால் தோற்கடிக்கப்பட்ட மஞ்சு உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மஞ்சு தனது மனுவில், பிரஜ்வல் ரேவண்ணா தனது வங்கிக் கணக்கில் இருந்த வைப்புத் தொகை, சொத்து விபரங்கள் உள்ளிட்டவற்றை தவறாக கணக்கு காட்டியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, வங்கி கணக்கு ஒன்றில் 48 லட்சம் ரூபாய் இருந்த நிலையில், 5 லட்சம் மட்டுமே இருப்பதாக தெரிவித்ததாகவும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 14 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் மஞ்சு தெரிவித்தார். வருமான வரிக் கணக்கில் மோசடிகள் செய்து இந்த சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளதாகவும், அது மட்டுமல்லாமல் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பினாமிகள் பெயரில் பல சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனால், பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் மஞ்சு கோரியிருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா வெற்றிக்கு எதிராக மஞ்சு உள்ளிட்ட சிலர் தொடர்ந்த வழக்கை ஒன்றாக கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.
அதன்படி, இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 1) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜ் தலைமையிலான அமர்வு, பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்டது. அதனால், பிரஜ்வல் ரேவண்ணாவை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
தேர்தல் முறைகேடு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதேநேரம், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற மஞ்சுவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த தீர்ப்பு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு நீதிமன்ற உத்தரவு பற்றி தெரியாது. ஊடகங்கள் மூலமாகத் தான் நானும் அறிந்து கொண்டேன். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். நான் தீர்ப்பு நகலை பார்க்கவில்லை” என்று கூறினார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மஞ்சு, கடந்த மார்ச் மாதம் பாஜகவிலிருந்து விலகி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இருந்தபோது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இவர் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏவாக இருக்கிறார்.