ஆளுங்கட்சி பிரமுகர் வீடு புகுந்து சுட்டுக்கொலை..! - பீகார் செய்திகள்
பிகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரமுகர் தீபக் மேத்தா அடையாளம் தெரியாத நபர்களால் அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவு வருகிறது.
பாட்னா : பிகார் மாநிலம் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரமுகர் தீபக் குமார் மேத்தா அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று (மார்ச் 28) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தீபக் குமார் மேத்தா நேற்றிரவு உணவு உண்டுவிட்டு அவரது வீட்டின் அருகில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தீபக் குமார் மேத்தாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், மேத்தாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மேத்தா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீபக் குமார் மேத்தாவின் நெஞ்சுப் பகுதி, தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
தீபக் குமார் மேத்தா, நகர் பரிஷத் டானாபூர் துணைத் தலைவராக உள்ளார். தீபக் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையறிந்த அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் டானாபூர் - காந்தி மைதானம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.
டானாபூர் பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலம் தொடர்பான பிரச்னையா, அரசியல் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கொலை நிகழ்ந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபக் மேத்தா 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் டானாபூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாலிபான்களுடன் ஒப்பிட்ட பாஜக.. அடித்து நொறுக்கிய மம்தா.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!!