டெல்லி: ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் ஜெய வர்மா சின்ஹாவை மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 31) நியமித்தது. முன்னதாக ஜெய வர்மா, ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
அப்போது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தெளிவான விளக்கங்களை அளித்திருந்தார். மேலும், விபத்துக்கான காரணங்கள், எவ்வாறு சரிசெய்யப்பட்டது போன்றவற்றை கூறியிருந்தார். விபத்தில் மூன்று ரயில்கள் மோதியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளையும் அவர் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவிக்கு ஜெய வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே வாரியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு ஜெய வர்மா சின்ஹா பதிவி ஏற்கவுள்ளார். அதேபோல், அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி 2024ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், ஜெய வர்மா சின்ஹா. இவர் 1988ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் வடக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு ரயில்வேயில் பணியாற்றி இருக்கிறார்.
மேலும் இவர், வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ரயில்வே ஆலோசகராகவும் நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அந்த காலகட்டத்தில்தான் கொல்கத்தாவில் இருந்து டாக்கா செல்லும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டது. கிழக்கு ரயில்வேயின் சீல்டா பிரிவில் கோட்ட ரயில்வே மேலாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
இந்திய ரயில்வே துறையில் ஜெய வர்மா சின்ஹா பல்வேறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவர் ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, ரயில்வே துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Chandamama: நிலவில் வட்டமடிக்கும் பிரக்யான் ரோவர்!