பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், கர்நாடக அமைச்சருமான ரமேஷ் ஜர்கிஹோலி கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றில் சிக்கினார். இது தொடர்பான காணொலியை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
இவ்விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தன்மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான புகார்களைச் சிலர் வேண்டுமென்று கூறுவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் எம்.வி. நாகராஜ் புகார் ஒன்றையும் அளித்தார். இவ்வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்திவருகிறது.
அமைச்சருக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள சிடி ஆதாரத்தில் உள்ள குரல் மாதிரிகளைச் சோதனை செய்துள்ளனர். மேலும், சிடி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை எஸ்ஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர்.
நேற்று (மார்ச் 25) இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், மூன்று காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு காணொலி ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் ஆகியோர் அவரது பெற்றோருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 26) அப்பெண் மூன்றாவது காணொலியை வெளியிட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்தக் காணொலியில், "எனக்கு ஆதரவளிக்கும் அனைத்து கர்நாடக மக்கள், கட்சித் தலைவர்கள், அமைப்பாளர்களுக்கு நன்றி. கடந்த 24 நாள்களாக எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது.
நான் மிகவும் பயத்தில் இருந்தேன். தற்போது, துணிச்சல் வந்துவிட்டது. எனது வழக்கறிஞர் ஜகதேஷ் மூலம் ஜர்கிஹோலி மீது புகார் அளித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பிரியங்கா சிங் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்யும் மனு நிராகரிப்பு