ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றபின்னர், முதன் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரும் 28 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தேர்தல் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வரையில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் 280 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல், 230 நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தல், 12 ஆயிரம் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் மற்றும் வேட்பாளர்களுக்கான பரப்புரையில் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி, சி.பி.எம்., பாஜக, காங்கிரஸ் ஆகியவை ஈடுபட்டுவருகின்றன.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அடையாளம், தன்னாட்சி, சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது குப்கர் பிரகடனம் என அழைக்கப்படுகிறது. அந்த குப்கர் பிரகடனத்தை ஏற்ற கட்சிகள் மக்கள் கூட்டணி (பிஏஜிடி) என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன.
மக்கள் கூட்டணி (பிஏஜிடி) சார்பில் போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.), ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, சி.பி.எம் போன்ற கட்சிகளின் தேர்தல் பரப்புரையை தடுக்கும் எண்ணத்தில் நிர்வாகம் தொடர்ந்து தடைவிதித்து வருகிறது. மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மக்கள் கூட்டணி வேட்பாளர்களையும் பாதுகாப்பு காரணங்களைக் கூறி வீடுகளை விட்டு வெளியேற நிர்வாகம் தடை விதித்துள்ளது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள பி.டி.பி இளைஞரணித் தலைவர் வாகீத் ரெஹ்மான் பரேவின் வீட்டிற்கு மெஹபூபா முப்தி செல்ல தடை விதித்தது.
இந்நிலையில், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய காஷ்மீரின் புட்கம் மாவட்டத்திற்கு இன்று செல்ல திட்டமிட்டிருந்த பி.டி.பி. தலைவர் மெஹபூபா முப்தியை யூனியன் பிரதேச நிர்வாகம் மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. நிர்வாகம் அவரை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மெஹபூபாவின் மகள் இல்டிஜா முப்தியையும், நிர்வாகம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் இந்த குற்றச்சாட்டை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும், நிர்வாகமும் மறுத்துள்ளது.
இதையும் படிங்க : 'வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்' -புதுச்சேரி முதலமைச்சர்