மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் பின்னகுரியைச் சேர்ந்த 46 வயதான ஷங்கர் பட்டாச்சார்யா, மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய அவர், 28 நாட்களை கடந்து பயணத்தை தொடர்கிறார். தனது கோரிக்கையை முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக, நடை பயணமாக காளிகாட் சென்று கொண்டிருக்கிறார்.
சுமார் 750 கிலோ மீட்டர் நடந்து சென்று, தான் கையில் எடுத்துச் செல்லும் மண்ணை, முதல்வரிடம் ஒப்படைத்து கோரிக்கை வலியுறுத்தவுள்ளார்.
மேற்குவங்கத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு மம்தா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மம்தாவை சந்திப்பது தொடர்பாக மம்தாவின் ஆதரவாளரான ஷங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், "முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜல்பைகுரி மாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தமைக்கு நன்றி. கடந்த 28 நாட்களாக நான் நடைபயணம் மேற்கொள்கிறேன். பகலில் நடப்பேன், இரவில் ஓய்வெடுப்பேன். நான் நடைபயணம் மேற்கொள்ள காரணம் திதிதான்(மம்தா).
அவர் அதிகம் நடப்பார். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அதனால் அவரைப் போலவே நடந்து சென்று, அவரை சந்திக்க முடிவு செய்தேன். கடந்த 11 ஆண்டுகளில் மம்தான பானர்ஜி எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதற்காக நன்றி கூறுவேன்.
எங்கள் மாவட்ட மக்கள் மாநிலம் பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. அதையும் எடுத்துரைப்பேன். முதலமைச்சரை சந்தித்த பின், வரும் 21ஆம் தேதி ஜல்பைகுரியில் நடைபெறும் தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேற்குவங்கத்தை பிரிக்கக்கோரி கூர்கா இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு - ஷிண்டே அரசு அதிரடி!