புத்காம் (ஜம்மு - காஷ்மீர்): நாட்டின் 76ஆவது காலாட்படை தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் சார்பில் "சௌர்ய திவாஸ்" நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாகிஸ்தானில் அப்பாவி இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் மனிதாபிமானமற்ற சம்பவங்களுக்கு பாகிஸ்தானே முழுப்பொறுப்பு. பாகிஸ்தான் தனது அட்டூழியங்களுக்கான விளைவை விரைவில் சந்திக்கும். பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
கில்கிட், பலுதிஸ்தான் போன்ற பகுதிகளை மீட்க 1994ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்துவதே எங்களது நோக்கம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வளர்ச்சியில் புதிய உயரங்களைத் தொட்டு வருகின்றன. முன்பு, சில தேச விரோத சக்திகள் மதத்தின் பெயரால் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்தனர். ஆனால், இப்போது அரசு மற்றும் ஆயுதப்படைகளின் விடாமுயற்சியால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் மக்கள் மத்திய அரசுத்திட்டங்களின் பலன்களைப்பெறுகிறார்கள். முன்னேற்றப்பாதையில் மக்களிடையே ஒற்றுமை உள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டைப்பாதுகாக்க தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த காலாட்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் வீரம் மற்றும் தியாகம் காரணமாகவே ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது. அந்த வீரர்கள் அமைத்த அடித்தளத்தில்தான் இப்போது இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. எப்போதும் கீழே விழாமல் இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதுதான் பெரிய விஷயம். 1947ஆம் ஆண்டு நடந்த சம்பவமும் அத்தகைய ஒன்றுதான்.
மேஜர் சோம்நாத் ஷர்மா, பிரிகேடியர் ராஜீந்தர் சிங், லெப்டினன்ட் கர்னல் திவான் ரஞ்சித் ராய் உள்ளிட்டோரின் தியாகமும், துணிச்சலும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உத்வேகமாக இருக்கும். அவர்களது தியாகங்களுக்கு நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சார் தாம் யாத்ரா முடிவு; கங்கோத்ரி தானின் கதவுகள் மூடல்