டெல்லி: குஜராத் சட்டப் பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. குஜராத்தில் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளரை மக்களே தீர்மானிக்கலாம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, தேசிய பொதுச் செயலாளர் இசுதான் காத்வி, பொதுச் செயலாளர் மனோஜ் சொராதியா உள்ளிட்டோரின் பெயர்களை பரிந்துரை செய்து, இவர்களில் ஒருவரை மக்களே தேர்வு செய்து 6357000360 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமோ அல்லது aapnocm@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த பரிந்துரை நேற்று (நவம்பர் 3) மாலை 5 மணி வரை நடந்தது. இந்த நிலையில், குஜராத் மாநில ஆம் ஆத்மியின் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காத்வியை அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பஞ்சாப் தேர்தலின் போது, அடுத்த முதலமைச்சராக யார் வர வேண்டும் என்று மக்களிடம் கேட்டோம். பகவந்த் மான் என்று தெரிவித்தனர். அதன்படியே அவரை முதலமைச்சராக்கினோம். அதுபோலவே இசுதான் காத்வி தேர்ந்தெடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. முதலமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். 2017ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளையும் கைப்பற்றின. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து மற்ற மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள கட்சி ஆம் ஆத்மி. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இதையும் படிங்க: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு