மும்பை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி சி57 என்ற ராக்கெட் மூலம் ஆதித்யா எல்.1 விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ சென்றடைந்து சூரியனை ஆய்வு செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து, ஜனவரி மாதம் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்.1 விண்கலம் வரும் ஜனவரி 6ஆம் தேதி லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மும்பை ஐஐடியில் (IIT Mumbai) நடைபெற்ற நிகழ்வில் அவர் தெரிவித்ததாவது, “சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், 2024 ஜனவரி 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் லாக்ராஞ்சியன் புள்ளியை அடையும். அதைத் தொடர்ந்து, ஆதித்யா எல் 1 எஞ்சின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தைக் கொண்டு, ஹாலோ ஆர்பிட் (halo orbit) எனப்படும் ஒளிவட்டப்பாதையில் நுழைகிறது.
லாக்ராஞ்சியன் புள்ளி என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையை நடுநிலையாக்கும் பகுதியாகும். சந்திரன், செவ்வாய், வியாழன் போன்ற பிற கோள்களின் தாக்கத்தால் முழுமையான நடுநிலைமைக்கு சாத்தியமில்லை. ஆதித்யா எல் 1 தற்போது வரை சிறப்பாக வேலை செய்து வருகிறது. ஆதித்யா எல் 1 அனுப்பும் தரவுகள், சூரியனின் இயக்கம் மற்றும் விண்வெளி வானிலையின் தாக்கம், அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை கண்டுபிடிப்போம்” என்று கூறினார்.
முன்னதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆதித்யா எல் 1 விண்கலம், அதன் இலக்கான லாக்ராஞ்சியன் புள்ளியை அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் சென்றடையும். இந்தியா சந்திரனை ஆய்வு செய்ய சந்திரயான் 3-இல் இருந்து தரவுகளை சேகரித்த பிறகு, பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் நன்றாக தூங்குகிறது. அது எழுந்திருக்கும் என்று நம்பினோம். ஆனால், அது நடக்கவேயில்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக இஸ்ரோ தலைவர் சோம்நாத், கதிர்வீச்சு உள்ளிட்ட காரணங்களால் சில அமைப்புகள் நிலவின் மேற்பரப்பில் வேலை செய்யாமல் போகலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்திய கடற்படைக்கு புதிய தோள்பட்டை இலச்சினை அறிமுகம்!