ஹைதராபாத்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று கிருமி, சீனாவின் வூஹான் ஆய்வகங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பேராசிரியர் அங்கஸ் டால்க்லிஷ் மற்றும் நார்வே ஆராய்ச்சியாளர் பிர்கர் சோரன்சென் ஆகியோர் கரோனா நோய்க் கிருமித் தொற்று குறித்து புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், கரோனா நோய்க் கிருமிக்கான சொந்தபந்தங்கள் குறித்த தகவல்கள், தங்களின் ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, இக்கிருமிக்கான மூலத் தகவல்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
வெளவால்களால் கரோனா பரவாது:
மேலும், வெளவால்களால் இது மனிதர்களிடம் பரவியது என்ற கூற்றை முற்றிலுமாக ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். வூஹான் நுண்கிருமி ஆய்வகங்களின் மூலம் தான், இவை பரவியிருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விவரங்களை தாங்கள் ஒரு ஆண்டு காலமாகவே வெளியிட முயன்று வந்ததாகவும், ஆனால் பெரிய அறிவியலாளர்கள் கூட, தங்கள் கூற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து, கரோனா நோய்க் கிருமி விலங்குகளிடமிருந்து இயற்கையாக மனிதர்களிடம் பரவியதாகவே நம்பிக்கொண்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் தங்களின் கருத்தைப் பதிவுசெய்துள்ளனர்.
இவை மட்டுமில்லாமல், வூஹான் ஆய்வு குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வேண்டுமென்றே அழிக்க அல்லது மறைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்துப் பேச முன்வந்த சீன அறிவியலாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டதாகவும் தங்களின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்றே, பல ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவுகளில் இதே கருத்தைத் தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வூஹானுக்குச் சென்றபோது, அங்குள்ள ஆய்வுக் கூடங்கள் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டதாகவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
அமெரிக்க மருத்துவ நிபுணரும், அமெரிக்க அதிபரின் மருத்துவத்துறை ஆலோசகருமான அந்தோணி பாசி (Anthony Fauci) கருத்தரங்கம் ஒன்றில் கரோனா நோய்க் கிருமித் தோன்றியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், "இதைப் பற்றி மேலும் தீவிரமான ஆய்வுகள், புலன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுக் கூடம் ஒன்றில் இருந்து இந்த நோய்த் தொற்றுக் கிருமி பரவியிருக்கலாம் என்பது குறித்த விசாரணை தேவையான அளவுக்கு விரிவாக நடத்தப்படவில்லை.
இதன் பரவல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் சீன அரசு வெளிப்படையாக செயல்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.