ஜெய்ப்பூர்: ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நாடு முழுவதும் லட்சக்கணக்காக மாணவர்கள் எழுதும் இந்த தேர்வு நடப்பு 2021ஆம் ஆண்டு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்கட்டத் தேர்வு கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை நடைபெற்றது. இதில், மொத்தம் 6.61 லட்சம் (6,61,776) மாணவர்கள பதிவு செய்திருந்த நிலையில், 6.52 லட்சம் (6,52,627) பேர் பிஇ, பிடெக் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த சாகேத் ஜா, பிரவர் கட்டாரியா, டெல்லியைச் சேர்ந்த ரஞ்சிம் பிரபால் தாஸ், சண்டிகரைச் சேர்ந்த குராம்ரித் சிங், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்தாந்த் முகர்ஜி, குஜராத்தைச் சேர்ந்த அனந்த் கிருஷ்ணா கிடாம்பி ஆகியோர் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில், 10 மாணவிகள் 99 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற சாகேத் ஜா, தனது 9ஆம் வகுப்பில், தாயார் சுனிதா ஜாவுடன் கோட்டா பகுதிக்கு வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜேஇஇ மெயின் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். லாக்டவுன் சமயத்திலும், ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து சாகேத் ஜா கூறுகையில், " கோட்டா பகுதிக்கு எனது கனவை நினைவாக்க வந்தேன். கோட்டாவில் படிப்பதற்கு சிறந்த சூழல் உள்ளது. ஜே.இ.இ முக்கியமாக என்சிஇஆர்டி அடிப்படையிலான பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. ஐஐடி, மருத்துவப் படிப்புகளுக்கு கோட்டா சிறந்தது. படிக்கும் போதே, ஆசிரியர்களிடம் அனைத்து விதமான சந்தேகங்களையும் கேட்டுவிடுவேன். விரைவில், இதில் என்னைப் பலப்படுத்திக்கொண்டு சிறந்த ஆசிரியராக வலம்வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? டி.ஆர்.பாலு கேள்விக்கு அரசு பதில்!