குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது அறிவியல் தத்துவம், அதனடிப்படையில் மனிதன் மற்றொரு மனிதனோடு தனது எண்ணத்தைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்திய முதல் மொழி சைகை. இந்த சைகை மொழி என்பது, உடல் அசைவுகள், முக பாவனைகளுடன் பேசப்படுவதாகும்.
இந்தச் சைகை மொழிகளிலும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் சைகை மொழிகள் எனப் பல உள்ளன. அமெரிக்க சைகை மொழியைப் பொறுத்தவரை ஆங்கில எழுத்துகளான 26 எழுத்துகளையும் கொண்டு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல கை சைகைகளை, அதுவும் ஒரே கையால் செய்கின்றனர்.
இந்திய, பிரிட்டன் சைகை மொழிகளைப் பொறுத்தவரை இரண்டு கைகளையும் பயன்படுத்துகின்றனர். நமது நாட்டைப் பொறுத்தவரை காது கேளாதோர், பேசும் திறனற்றோர் போன்றோருக்கு இந்தச் சைகை மொழி எளிதாகப் புரிவதாகவும், அவர்களது தேவைகளை வெளிப்படுத்துவது எளிதாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
பல சைகை மொழிகள் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மாற்றுத்திறனாளிகளின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதைப் பலர் கணித்தனர்.
ஆனால் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் மைக்கேல் திலேப்பின் என்பவர்தான் அவர்களின் உணர்வுகளை, பிறர் புரிந்துகொள்வதற்கென ஒரு மொழியை முதன் முதலில் உருவாக்கியவர். அதனால் இவர் காது கேளாதோரின் தந்தை என்றழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று, சர்வதேச சைகை மொழிகளின் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சாதாரண மனிதர்களுக்குக்கூட காது கேட்கும்வரைதான் தங்களது பேச்சு மொழிகளைப் பரிமாற முடியும், சற்று தூரம் சென்றாலும் அனைவருக்கும் சைகை மொழிதான்.
தற்போதுகூட செய்தி ஊடகங்களில் சைகை மொழிகளுடன் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. இதனைச் சிலர் கேலி செய்துவருகின்றனர் என்பது வேதனையான விடயம்.
சர்வதேச சைகை மொழிகள் நாளான இன்றுமுதல் இதனைத் தவிர்த்து, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவும் இம்மொழியை மேம்படுத்துவோம் என உறுதியேற்போம்.
இதையும் படிங்க: கொடுமை: 7 ஆண்டுகளாக கழிவறையில் குடும்பத்துடன் வசிக்கும் பெண்