சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் மக்களின் குரலை அடக்குவது ஜனநாயகம் அல்ல. ஆட்சியில் உள்ளவர்கள் தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களின் சுதந்திரத்தை முழுமையாக மதிக்க வேண்டும். அரசாங்க கொள்கைகள் என்பவை நாட்டு மக்களை அச்சமின்றிப் பேசக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய சூழலில், நாட்டில் ஜனநாயகத்தை உணர முடிவதில்லை. அரசியல் தலைவர்களின் பேச்சுகளிலும், புத்தகங்களிலும் மட்டுமே காண முடிகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities Prevention Act (UAPA)) நடவடிக்கைகளை சொல்லலாம். மக்களின் எதிர்ப்புக் குரலை ஒடுக்க அரசாங்கம் இதுபோன்ற பல்வேறு சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறது.
2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை யுஏபிஏவின் கீழ் மொத்தம் 4,690 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களில் 149 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, கடந்த ஏழு ஆண்டுகளில் 10,552 பேர் கைது செய்யப்பட்டு, 253 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த புள்ளி விவரங்கள் மக்கள் மீது அரசாங்கம் எவ்வாறு மனித உரிமை மீறல்களை திணிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, இந்த சட்டத்தின் கீழ் முகமது அலி பட், லத்தீப் அகமது வாஜா, மிர்சா நிசார் உசேன் என்ற மூன்று காஷ்மீரிகள் 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் 26 ஆண்டுகள் கழித்து டெல்லி, ராஜஸ்தான் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், இவர்கள் சிறையில் கழித்த ஆண்டுகளை யாராவது திருப்பித் தர முடியுமா?. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அப்பாவிகளை துன்புறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை இது உணர்த்துகிறது. இதேபோல, ஐஜாஸ் பாபா என்ற மற்றொரு காஷ்மீரி 2010ஆம் ஆண்டு யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி இல்லை என்று விடுக்கப்பட்டார்.
இந்த விடுதலைக்கு காவல்துறை மற்றும் மாநில அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையிலும் பாபா குற்றவாளி இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நீதிமன்றம் தெரிவிக்கையில், அரசுத் தரப்பு வாதம் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே உள்ளது. ஆதாரப்பூர்வமாக இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தது. இப்படி பல்வேறு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் உள்ளது.
யுஏபிஏவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே. தங்களது இளைமை காலத்தை சிறையில் கழித்தால், அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா...? அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரம் என்னவாகும். சொல்லப்போனால், யுஏபிஏவின் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதை மேலும் கடினமாக்கி உள்ளது.
அண்மையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய தேவாங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் ஆகிய மூன்று மாணவர்கள் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையில் டெல்லி நீதிமன்றம், இந்த வழக்கில் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். சமூகத்தில் அராஜகத்தை உருவாக்கும்படி அரசாங்கம் செயல்படும்போது மக்களின் நம்பிக்கையை இழக்கிறது என்று தெரிவித்திருந்தது.
இப்படி அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேச மாநிலங்களில் மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் யுஏபிஏ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை நிலுவையில் உள்ளன. ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் குறித்து நாட்டின் தலைவர்கள் பேசும் அதே வேளையில், மாறாக அதற்கு எதிராக கைது நடவடிக்கைகள் நடக்கிறது. தனிமனித சுதந்திரம், அரசாங்க தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் உள்ளிட்டவை பறிக்கப்படும்போது தேசிய ஒற்றுமை கேள்விக்குறியாக மாறும். - எழுதியவர் சைலேஷ் நிம்மகத்தா.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம்: 1967ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுவருகிறது. நாட்டில் உள்ள 42 தீவிரவாத அமைப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், இவற்றில் 13 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின்படி, இதுவரை, 31 தனிநபர்கள், தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய- மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள், இதுபோன்ற அமைப்புகள் / தனிநபர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, சட்டத்தின்படி அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள்/உறுப்பினர்கள், வேறு பெயர்களில் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் விதமாக, தனிநபர்களை தீவிரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்டப்பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 2019-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள்" - ராகுல்காந்தி காட்டம்!