பெட்டியா (பிகார்): பிகார் மாநிலத்தின் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் உள்ள நார்கட்டியாகஞ்ச் பகுதியில் நார்கட்டியாகஞ்ச் சப் டிவிஷன் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரதீப் கிரி என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை சப் டிவிஷ்னல் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு பின்னால் இருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உள்ளது.
இதனையடுத்து, பிரதீப் கிரி தனது உடன் பணிபுரிபவர்களை அழைத்துக் கொண்டு அழுகை சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது, அங்கு தேங்கி இருந்த தண்ணீருக்கு நடுவே குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்து உள்ளது. பிறந்த ஒரே நாளில் அந்த குழந்தை வீசப்பட்டு உள்ளது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அந்த குழந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரவு காவலாளி பிரதீப் கிரி கூறுகையில், “குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட பிறகு நாங்கள் அங்கு சென்றோம்.
அப்போது, அங்கு அழுது கொண்டு இருந்த குழந்தை தரையில் படுத்த நிலையில் இருந்தது. அதேநேரம், குழந்தை இருந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. நாங்கள் அங்கு இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். மருத்துவர்கள் அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தக் குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்டு உள்ளது. இந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக உள்ளது” என தெரிவித்தார்.
இந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் யார், அவர்கள் எங்கு இருக்கின்றனர், இந்த குழந்தை எப்படி இங்கு வந்தது உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் குழந்தை குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் சேகரிக்கத் தொடங்கி உள்ளது. தற்போது குழந்தை, மருத்துவமனை ஊழியர்களால் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக நார்கட்டியாகஞ்ச் சப் டிவிஷன் மருத்துவமனையின் மருத்துவர் பிராஜ் கிஷோர் கூறுகையில், “மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பின்புறம் ஒரு பிறந்த பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அந்த குழந்தை அங்கு இருந்து கொண்டு வரப்பட்டு, தீவிர குழந்தை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தை தற்போது சிகிச்சையின் கீழ் உள்ளது. இந்த குழந்தை தற்போது நலமாக இருக்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவி மற்றும் 8 மாத குழந்தையை கோடாரியால் கொன்ற கணவர் கைது!