டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள மகாஜன் துப்பாக்கிச் சூடு களத்தில் இந்திய- அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான 16ஆவது கூட்டு ராணுவப் பயிற்சி இந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயிற்சியில், இந்திய ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படையின் 11ஆவது பட்டாலியன் வீரர்களும், தென்மேற்கு கமாண்ட் வீரர்களும் பங்கேற்றனர். அதேபோல அமெரிக்க ராணுவத்தின் இரண்டாவது பட்டாலியன் பிரிவினர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டுப் பயிற்சியில், சமகால முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களின் பரிமாற்றம், தந்திரமான நேரங்களில் செயல்படுதல், ஒருவருக்கொருவர் சிறந்த பயிற்சி முறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றில் கவனம்செலுத்தி வீரர்கள் பயிற்சிபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி இரு படைகளுக்கிடையிலான உறவுகளை வளர்த்தது. இரு நாடுகளின் வளமான கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் காட்டும் தொடர் நிகழ்ச்சிகளும் இரு படைகளிடையே நடைபெற்றதாக கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில் தெரிவிக்கப்பட்டது.