டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய காணொலி கூட்டத்தில் இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், " இந்தியா ஹெச்ஐவி வைரஸைக் கட்டுப்படுத்த தனித்துவமான, சிறப்பான திட்டம் ஒன்றினைக் கொண்டுள்ளது. இத்திட்டம் பல்வேறு நாடுகளின் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. இது தொற்றால் பாசிக்கப்பட்டவர்களை சமூகத்தினருடன் ஒன்றாக பழகுதலை முன்னிறுத்தி தனியார் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சோதனை முயற்சி. இந்த சோதனையின் போது, பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள உதவுதல், அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குதல், ஆலோசனை வழங்குதல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உறவுகளை அமைத்தல், பரிசோதனைகள் மோற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2030ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டன். இந்த முயற்சிகளில் இந்தியா 90-90-90 என்ற குறிக்கோளினை 2020ஆம் ஆண்டில் எட்டியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 90 விழுக்காட்டினரை பரிசோதனை செய்வது, 90 விழுக்காடு நோயாளிகளை சிகிச்சைக்கு கொண்டு செல்வது, 90 விழுக்காட்டினருக்கு வைரஸால் ஏற்படும் தாக்கங்களை பரிசோதித்து தக்க பரிசோதனைகளை மேற்கொள்வது என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
2010ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020இல் 75 விழுக்காடு இளைஞர்களும், சிறார்களும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுத்தல், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல முறைகள் மூலம் இந்தியா எய்ட்ஸ் நோயிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் மீள்வதற்கு உதவ தாயராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்க அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன..!