ராஜஸ்தான்: முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மலர்ந்த காதலுக்காக நாடு விட்டு நாடு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில், சட்டவிரோதமாக எல்லைக் கடக்கும் சம்பவங்களும் உண்டு.
கடந்த மே மாதம் சீமா ஹைதர் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்மணி, தனது காதலனுக்காக நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். கரோனா பெருந்தொற்று காலத்தின்போது, பப்ஜி விளையாட்டின் மூலம் சீமாவுக்கும், நொய்டாவைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. காதலனுடன் சேர்ந்து வாழ சீமா இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடிபுகுந்துள்ளார். தற்போது தனது காதலன் வீட்டில் சீமா வாழ்ந்து வருகிறார். அதோடு, தான் இந்துவாக மாறி காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு இந்தியக் குடியுரிமை தர வேண்டும் என்றும் சீமா கோரிக்கை வைத்துள்ளார். அதேநேரம், சீமா உளவாளியாக இருக்கக்கூடும் என்றும் உத்தரபிரதேச போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், இதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு(34). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு முகநூல் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயது இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தான் ஜெய்ப்பூர் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு, அஞ்சு தனது காதலனைப் பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு, அவர் சட்டவிரோதமாக நுழைந்திருக்கிறாரா? என்று பாகிஸ்தான் போலீசார் விசாரித்தனர். பிறகு ஆவணங்கள் சரியாக இருந்ததும் விடுவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், அஞ்சு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் முறையான ஆவணங்களுடன் சட்டப்படி பாகிஸ்தான் சென்றதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ஊடகங்கள் தன்னைப் பற்றி தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளிடம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், ஏதேனும் கேட்க விரும்பினால் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைத்து கேள்விகளுக்கும் தான் பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அஞ்சு காதலனைப் பார்க்க பாகிஸ்தான் சென்ற சம்பவம் நேற்று(ஜூலை 23) அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார், அஞ்சுவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.