டெல்லி : பண மோசடி புகாரில் வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி, சஞ்சய் பந்தாரி ஆகியோரை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்துவதை விரைவுபடுத்துவது தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு இங்கிலாந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி மீது நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் மூவரும் இங்கிலாந்து தப்பிச் சென்றனர். இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற மூவரையும் மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி அந்நாட்டு அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான சட்டரீதியிலான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த இந்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு விரைவில் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணம் மோசடி, 2012ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறைக்கு உள்ளான கிங்பிஷர் விமான நிறுவனம் தொடர்பாக வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாதது உள்ளிட்ட வழக்குகள் விஜய் மல்லையா மீது நிலுவையில் உள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா இங்கிலாந்தில் குடியேறினார். இதையடுத்து அவரை நாடு கடத்துவது தொடர்பாக மத்திய அரசு, இங்கிலாந்து அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு சொத்து மதிப்பு குறித்து முழு அறிக்கை வெளியிடாதது, குடும்ப உறுப்பினர்களுக்கு ரகசியமாக 40 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வழங்கியது உள்ளிட்ட புகார்களில் நிதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின் பிரிட்டனை சேர்ந்த தனியார் மதுபான நிறுவனத்திடம் இருந்து மல்லையா 40 மில்லியன் டாலர் பணம் வாங்கியதை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
அதேபோல், வைரவ வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 200 கோடி அமெரிக்க டாலர் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பண மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், தனக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்க நிரவ் மோடி முயற்சித்ததாக கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நிரவ் மோடி கைது செய்யப்பட்ட நிலையில் தென்கிழக்கு லண்டனில் உள்ள HMP Thameside சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மூன்றாவதாக தொழிலதிபர் மற்றும் ஆயுத டீலர் சஞ்சய் பந்தாரி மீது வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சஞ்சய் பந்தாரி தொடர்பான பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர் வதேராவுடன் சஞ்சய் பந்தாரிக்கு நெருக்கம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சஞ்சய் பந்தாரி கமிஷன் பெற்றுக் கொண்டு ராபர் வதேராவுக்கு லண்டனில் சொத்து வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேரா தரப்பு புறக்கணித்து உள்ளது. சஞ்சய் பந்தாரியை கைது செய்ய சிவப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : யார் இந்த கேப்டன் மில்லர்? கதாநாயகனை செதுக்கிய கதையின் நாயகன்!