சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர். இந்நிலையில், போராட்டத்தின் நீட்சியாக 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஆலையை மூடக்கோரி, ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக மக்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது திடீரென கலவரம் மூண்டது. காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரசு சொத்துகள் சேதமாக்கப்பட்டன. காவலர்களின் ரோந்து வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட 17 பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தக் குற்றச்சாட்டில் காவலர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், “இவர்கள் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டோர் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு இன்றளவும் மக்களின் ஆறா வடுவாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் தலை, மார்பு மற்றும் வாய் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்தன என்பது நினைவு கூரத்தக்கது.