டெல்லி: இந்தியா உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் (S&P Global Market Intelligence) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகிறது.
இந்த நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி உடன் உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை வைத்து இருக்கும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் நிதியாண்டு முடிவில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் கூற்றுப்படி, 2023 மற்றும் 2024ஆம் நிதியாண்டில் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். அதே போல், உள்நாட்டுத் தேவை வளர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதால் நீண்ட கால வளர்ச்சியை நோக்கிச் செல்ல வாய்ப்பாக அமைகிறது. மேலும், இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் நகர்ப்புற குடும்ப வருமானம் அதிகரிக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2030ஆம் ஆண்டு 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜப்பானின் ஜிடிபியை விட அதிகமாகும். இதனால், ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற வாய்ப்பு உள்ளது. 2022ஆம் ஆண்டு இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகியுள்ளது.
தற்போது, அமெரிக்கா 25.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியுடன் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதனையடுத்து, சீனா 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியுடன் இரண்டாம் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. ஜப்பான் 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியுடன் மூன்றாம் இடத்திலும், ஜெர்மனி 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
எஸ்&பி குளோபல் கூறும் போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர மக்களால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய உள்நாட்டு நுகர்வோர் சந்தை மற்றும் அதன் பெரிய தொழில்துறை ஆகியவை இந்தியாவை ஒரு பரந்த முதலீட்டு இடமாக மாற்றியுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் வளர்ச்சி உலக அளவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க எற்ற இடமாக உள்ளது. எனவே, 2030ஆம் ஆண்டு இந்தியா உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என எஸ்&பி குளோபல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் சாம்சங் 'கேலக்ஸி டேப் A9' டேப்லெட் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன?