நேபாளம், பூட்டான் உள்பட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக ஏற்றுமதி செய்ய உயர்மட்ட அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பில், மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கிடைத்த தகவலின்படி, கோவாக்சின் தடுப்பூசி மங்கோலியா, ஓமான், மியான்மர், பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கும், கோவிஷீல்ட் தடுப்பூசி ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு பயன்பாட்டிற்கு தேவையான தடுப்பூசி டோஸ் இருப்பது உறுதி செய்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவும், பின்னர் வர்த்த ரீதியாக மருந்துகள் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், தடுப்பூசிகள் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் எந்தவிதமான கோரிக்கையும் வைக்காததால், அண்டை நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இணைக்கப்படவில்லை என உயர் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.