டெல்லி: 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19, உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இந்த வைரஸ் பலவிதமாக உருமாற்றம் அடைந்து, பல்வேறு நாடுகளுக்குப் பரவ தொடங்கியது.
கரோனா வேரியண்ட்-களுக்கு பெயர்
அத்தகைய கரோனா வேரியண்ட்-களுக்கு, டெல்டா, கப்பா, ஆல்பா, பீட்டா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பில் டெல்டா வகை சார்ந்த சார்ஸ்-கரோனா வைரஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்' ஆக உருமாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
22 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா
இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மற்றவர்கள் மத்தியப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கவலை தரக்கூடியதாகும் டெல்டா பிளஸ்
இந்நிலையில், டெல்டா பிளஸ் கரோனா கவலை தரக்கூடியது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது.
இந்த வகை கரோனா, அதிகமாகப் பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டர்களுடன் (receptors) வலுவாக ஒட்டக்கூடிய தன்மை கொண்டது என இன்சாகோக் தெரிவித்துள்ளது.
3 மாநிலங்களுக்கு அறிவுரை
எனவே, டெல்டா பிளஸ் கரோனா பரவியுள்ள மூன்று மாநிலங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
9 நாடுகளில் பாதிப்பு
இந்தியா உள்பட ஒன்பது நாடுகளில் டெல்டா பிளஸ் கரோனா பரவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெல்டா வைரஸ் பாதிப்பு முழுவதுமாக குறையாத நிலையில், தற்போது டெல்டா பிளஸ் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.
இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது அலைக்கு இதுதான் காரணமாக அமையுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கோவாக்சினில் 77.8 விழுக்காடு செயல்திறன்!