கடந்த நவம்பர் 19ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்டர் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், நக்ரோடா தாக்குதலைக் கண்டிக்கும்வகையில் பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியுள்ளது.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுநாளை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பயங்கரவாத முகாம்களை அகற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நக்ரோடா தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா, உயர்மட்ட புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.