டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் வைத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தெலங்கானாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. ஏற்கனவே ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, இன்று (டிச. 6) எதிர்க் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்தார்.
அதேநேரம் பல்வேறு காரணங்களால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, டிசம்பர் 6ஆம் தேதி கூட்டம் முறைப்படியான கூட்டம் இல்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் வைத்து இன்று (டிச. 6) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்தும், தொகுதி பங்கீடு மற்றும் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வைத்து இரண்டாவது கூட்டமும், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி மும்பையில் வைத்து 3வது கட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர் திருத்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்! எதிர்க்கட்சிகள் எதிர்க்க என்ன காரணம்?