டெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, ஆண்டனி பிளிங்கன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவலை சந்தித்து, பல்வேறு பிரச்னைகள் குறித்தும், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் பிளிங்கன் ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுக்கு பின் பேட்டியளித்த பிளிங்கன், இரு தரப்பு உறவுகளை மேலும் வலுவடைய செய்வது குறித்து, நீண்ட விவாதம் நடந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு உலக நலனுக்கானது. அதனால் தான், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில், இந்தியாவுக்கு எப்போதும் முன்னுரிமை தரப்படுகிறது. தற்போதைய கரோனா சூழலை இந்தியா - அமெரிக்கா சேர்ந்து முடிவு கொண்டு வரும் என்பதில் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, "பல சர்வதேச மற்றும் பிராந்திய சவால்களுக்கு இடையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அவற்றை எதிர்கொள்வது குறித்து, குறிப்பாக கூட்டாக எதிர்கொள்வது குறித்து பேசிஉள்ளோம். பேரிடர், பெருந்தொற்று காலங்களில் பைடன் அரசு இந்தியாவுக்கு உதவிகரமாக இருந்ததற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், திபெத் புத்த மதத் தலைவர், தலாய் லாமாவின் பிரதிநிதியான நகோடப் டாங்சுக்கை, டெல்லியில் சந்தித்து பேசியது முக்கியமாக நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.