நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஜன. 16) தொடங்குகிறது. இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இந்நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
முதல் நாளான இன்று நாடு முழுவதும் உள்ள 3,006 தடுப்பூசி மையங்களில், தலா நூறு பேர் வீதம் சுமார் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசி சேவை குறித்து அனைத்து விவரங்களையும் உள்ளடக்கும் விதமாக கோ-வின்(Co-WIN) என்ற டிஜிட்டல் தளத்தையும் அதன் செயலியையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த கோ-வின் தளம் முலம் தடுப்பூசி பயனாளர்களின் அனைத்து விவரமும், தடுப்பூசி பெற்றப்பின் அவர்களின் உடல் நிலை குறித்த தொடர் கண்காணிப்பு விவரமும் இந்தத் தளத்தில் பதிவிடப்படும்.
இந்தியாவில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 காரணமாக உயிரிழந்த நிலையில், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, பாரத் பயோட்டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 30 கோடி சுகாதாரப் பணியாளார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: 'மணல் சிற்பத்தில் திருவள்ளுவர்' - சிற்பக் கலைஞரின் கலைவண்ணம்!