டெல்லி: இந்தியா முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு நாடாக உள்ளது என்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம் தொடர்பான மாநாட்டில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், "மக்கள் அனைவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். உலகில் சில நாடுகள் சீனாவுடனான பரிவர்த்தனைகளை விலக்கிவருவதால், சீனாவிற்கு அடுத்தபடியாக முதலீடுகளை ஈர்க்கும் இடத்தில் இந்தியா உள்ளது.
எனவே உலக உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கும். இந்தியாவிடம் மூலப்பொருள்கள், திறமை, இளைய தலைமுறையினரின் சக்தி ஆகியவை பெருமளவில் உள்ளது.
தொழில்மேம்பாட்டுக்கான மிக முக்கியமான நான்கு துறைகளாக உள்ளது நீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல்தொடர்பு. இவை அனைத்தும் இந்தியாவில் சீராக உள்ளது.
இந்தியா அமைப்புகளின் மூலம் கூட்டு முயற்சியுடன் தொழில்களை உருவாக்கும் வாய்ப்புகளை அளிக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகம் தொழில்தொடங்குவதற்கான போதுமான ஒத்துழைப்பை வழங்கும். மக்கள் உதவியுடன் இந்தியாவைப் பொருளாதாரத்தில் முன்னோடியான நாடாக மாற்ற இயலும்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தகவல் தொடர்பு கட்டமைப்பிற்கான வழித்தட உரிமை அனுமதிக்கான வலைதளம்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு!