டெல்லி: 'மீடியா ஒன்' என்ற மலையாள செய்தி தொலைக்காட்சியை மத்யமம் என்ற தனியார் ஒளிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. இந்த தொலைக்காட்சியின் உரிமம் கடந்த 2021ஆம் ஆண்டு காலாவதியான நிலையில், உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர். அப்போது, நாட்டின் பாதுகாப்புக் கருதி, இந்த தொலைக்காட்சியின் உரிமத்தை புதுப்பிக்க முடியாது என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துவிட்டது.
மத்யமம் நிறுவனத்திற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்புக்கும் இடையிலான உறவைக் காரணம் காட்டி உரிமம் மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. மத்திய அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தொலைக்காட்சி தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் முடிவை ஏற்று மீடியா ஒன் தொலைக்காட்சியின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மீடியா ஒன் தொலைக்காட்சியும் மற்றும் கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கமும் இணைந்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மீடியா ஒன் வழக்கில் இன்று(ஏப்.5), உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி தொலைக்காட்சிக்கு உரிமம் தர மறுப்பதை ஏற்க முடியாது எனக்கூறி, உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது தலைமை நீதிபதி சந்திர சூட், "செய்தி சேனலின் ஒளிபரப்பைத் தடை செய்யும் விஷயத்தில், மத்திய ஏஜென்சிகளின் ரகசிய அறிக்கைகளின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் பொதுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுபோன்ற வாதங்களை ஏற்க முடியாது. மத்திய ஏஜென்சிகள் பின்னணியில் உள்ள காரணங்களைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும், வெறும் உண்மை கண்டறிதல் மட்டும் போதாது.
அதேபோல் அனைத்து அறிக்கைகளும் ரகசியமானது என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த வாதம் நீதிமன்றம் போன்ற வெளிப்படையான அமைப்புக்கு எதிரானது. உரிமம் மறுக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடாமல் இருப்பதும், சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு மட்டும் வெளிப்படுத்துவதும் நீதி விசாரணைக்கு எதிரானது. தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி மக்களின் உரிமையை அரசு மறுக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது.
சுதந்திரமான ஊடகம் சமூகத்திற்கு அவசியம். ஜனநாயகத்தை நிலைநாட்ட உண்மையை எடுத்துரைக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது. செய்தி சேனல் அரசாங்கத்தை விமர்சிப்பதை தேச விரோதம் என்று கூற முடியாது" என்று கூறினார்.
பின்னர் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த நீதிபதிகள், அதன் உரிமத்தை நான்கு வாரங்களுக்குள் புதுப்பிக்கவும் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வினாத்தாள் லீக் விவகாரம்: தெலங்கானா பாஜக மாநிலத்தலைவர் பண்டி சஞ்சய் அதிரடி கைது!