ஷியோ(ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (டிச.3) தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மையுடன் முன்னிலையிலிருந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்த வரையில் 1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியை விட பாஜக தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஷியோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திர சிங் பதி என்ற சுயேட்சை வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை விட முன்னணியில் உள்ளார் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ரவீந்திர சிங் பதி வயது 26 இவர் அப்பகுதி மாணவர் தலைவராகவும் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்துள்ளார். இந்த நிலையில் பாஜக ஷியோ தொகுதியில் ஸ்வரூப் சிங் என்பவரை பாஜக வேட்பாளராக நிறுத்தியது. இதனையடுத்து ரவீந்திர சிங் பதி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். ஷியோ தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்வரூப் சிங், காங்கிரஸ் வேட்பாளராக அமீன் கான் சுயேட்சை வேட்பாளராக ரவீந்திர சிங் பதி மற்றும் பதே கான் ஆகியோர் போட்டியிட்டனர்.
ரவீந்திர சிங் பதி மாணவர்கள் உரிமைக்காகப் போராடியுள்ளார். இதனால் அத்தொகுதி மக்களிடம் எளிதாகப் பிரபலமாகியுள்ளார். மேலும் அவர் தேர்தலில் சுயேட்சையாகக் களம் இறங்கிய போது அவரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகத் தொடங்கியது. இதுவும் அவரது தற்போதைய முன்னிலைக்கு உதவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோத்வாரா தொகுதி (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா தொகுதியில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ராஜ்யவர்தன் ரத்தோரை விடக் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அபிஷேக் சவுத்ரி 14 சுற்று வரை முன்னிலையில் இருந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சவுத்ரி வயது 33 விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தியத் தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) தலைவராக உள்ளார். தன்னை சிவபக்தர் எனத் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரின் புறநகர்ப் பகுதியாக உள்ள ஜோத்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் போட்டியிட்டார் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்ப்பில் அபிஷேக் சவுத்ரி போட்டியிட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (டிச.3) சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸைவிட பாஜக தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளனர்.
ஆனால் ஜோத்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரை விடக் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சவுத்ரி 14வது சுற்று வரை முன்னிலையில் இருந்தார். ஜோத்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் பலர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 15வது சுற்றிலிருந்து மீண்டும் முன்னிலைக்கு வந்த பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தற்போது வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஒரு யோகி - யார் இந்த மகந்த் பாலக்நாத்? முதலமைச்சராவாரா?