பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் விஜயப்பூர், கலாபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் விபத்துகள் நடந்துள்ளன.
புதுமணத் தம்பதி பலி: கர்நாடக மாநிலம் விஜயப்பூர் மாவட்டத்தில் உள்ள விஜயப்பூர் நகரில் சோலாப்பூர் பைபாஸ் அருகே, நேற்று இரவு டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோன்னமல்லா தெரதாலா (31) என்ற இளைஞரும், அவரது மனைவி காயத்ரி(24)-யும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த மே 22ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான 24 நாட்களிலேயே புதுமணத் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
![விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-vjp-02-new-pair-death-av-ka10055_14062023081322_1406f_1686710602_102_1406newsroom_1686718962_755.jpg)
மின்சாரம் தாக்கி தம்பதி பலி: நேற்று கலாபுரகி மாவட்டத்தில் இளம் தம்பதியினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். கலாபுரகி மாவட்டத்தின் சித்தப்பூரில் ஹஸ்ரத் சிட்டாஷாவலி தர்காவில் நடைபெற்ற கண்காட்சிக்கு, ஷிவு ரத்தோட் (30) என்பவரும், அவரது மனைவி தாராபாயும்(26) சென்றிருந்தனர். அப்போது, மின்கம்பத்தின் அருகே தரையில் புதைந்திருந்த மின்கம்பி வழியே தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பரவியிருந்தது. இதை அறியாமல் தண்ணீரில் கால் வைத்த தாராபாயை மின்சாரம் தாக்கியது. அவரைக் காப்பாற்றச் சென்ற கணவர் ஷிவு ரத்தோட் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களைக் காப்பாற்றச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேசிபி ஏறியதில் தொழிலாளர்கள் பலி: நேற்று இரவு ராய்ச்சூர் மாவட்டத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. தேவதுர்கா தாலுக்காவுக்குட்பட்ட பகுதியில் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்காக மூன்று தொழிலாளர்கள் சென்றிருந்தனர். வேலை முடிந்ததும் இரவு அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர். சாலைக்கு அருகே அவர்கள் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது, அவ்வழியாக வந்த ஜேசிபி தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்த விஷ்ணு (26), சிவராம் (28), பலராம் (30) என தெரியவந்துள்ளது.
கொரட்டகரே விபத்து: தும்குரு மாவட்டத்தில் கொரட்டகரே அருகே நேற்று நள்ளிரவில் லாரியும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் சென்ற 7 பேரில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். சம்பவ இடதுக்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இளைஞர்கள் காரில் நண்பரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இதையும் படிங்க: Bengaluru Shocker: தாயின் உடலை சூட்கேசில் அடைத்து காவல் நிலையம் எடுத்து வந்த மகள்!