உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் குறைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுடன் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஒன்பது கரோனா தடுப்பூசி மருந்துகள் பல்வேறு கட்டங்களில் மருத்துவப் பரிசோதனைகளின் உள்ளன.
கரோனா தடுப்பூசி தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விற்குப் பதிலளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், "எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி, டி.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி போன்ற அனைத்து தடுப்பூசி தளங்களிலும், செயலற்ற தடுப்பூசிகள் பாதுகாப்பானவை.
எனவே இதில், பாதகமான எதிர்வினைகள் குறைவாக உள்ளன. கட்டம் 1 & 2 மருத்துவப் பரிசோதனைகளில் சுமார் 755 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், கடுமையான பாதகமான நிகழ்வுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பிபிவி -152 பி தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களுக்கு 14 நாள்களுக்குப் பிறகுதான் தடுப்பூசி செயல்படத் தொடங்கும். தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்த நேரத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த வகை தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள 14 நாள்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
இடைக்காலப் பகுப்பாய்வின்போது சோதனைகள் வெற்றிபெற்று, ஒழுங்குமுறை அலுவலர்களிடம் உரிய ஒப்புதல் பெற்றபின் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பிறகு 65 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி அளிக்க முன்னுரிமை வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.