புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி போட்டியிடக்கூடிய தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட வினோபா நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அருகே என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சின்னமான ஜக்கு பதிக்கப்பட்ட சிறிய தாள்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாக்குச்சாவடி அருகே சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட தட்டாஞ்சாவடி தொகுதி மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், அப்போது அங்கு வந்த காவல் துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அவர்களைச் சமாதானம் செய்து சாலையில் துண்டுத்தாள் வீசியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும் சாலையில் கிடந்த ஜக்கு சின்னம் பதித்த தாள்களைத் தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனடியாக அகற்றினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: ’அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்’ - முதலமைச்சர் வேண்டுகோள்