நாக்பூர் (மகாராஷ்டிரா) : மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாஹா அர்மான் இஷ்தியாக் அகமது கான். இவர், தனது மனைவி ஹினா மற்றும் குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றிருந்தார். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமியை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
சிறுமியும் சுமார் 7 முதல் 8 நாட்கள் வரை வீட்டின் குளியலறையில் இருந்துள்ளார். அப்போது, ஆகஸ்ட் 30ஆம் தேதி மின்கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருளில் இருந்த சிறுமி பயந்து குளியலறையின் ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்துள்ளார்.
அதன்பின், பல மணி நேரம் வீட்டின் வெளியே அமர்ந்திருக்கிறார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சந்தேகமடைந்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது தான் அவருக்கு நடந்த இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் காவல் துறையினருக்குத் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சிறுமியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்தது தெரியவந்தது. அவர்கள் சிறுமியை சிகரெட் மற்றும் பிற இரும்பு பொருட்களால் சூடு வைத்து கொடுமை படுத்தியிருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தினர் சிறுமியை தினமும் குளியலறையில் அடைத்து வைத்ததும், கெட்டுப்போன மற்றும் பழைய உணவுகளை சிறுமிக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் வயது தெரிய வரவில்லை. சுமார் 8 முதல் 10 வயது இருக்கும் என தெரிகிறது.
மேலும், அந்த சிறுமி பெங்களூரைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. தாஹா அர்மான் இஷ்தியாக் அகமது கானின் மனைவி ஹினா, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இருந்து உதவிக்காக அழைத்துச் செல்வதாகவும், சிறுமிக்கு நல்ல முறையில் கல்வி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தது கொடுமைப்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டுச் சென்ற தாஹா அர்மான் இஷ்தியாக் அகமது கானை காவல் துறையினர் நாக்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரது மனைவி ஹினா மற்றும் மைத்துனர் அசார் நருதின் ஷேக் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேற்று (ஆக.31) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்த விரிவான அறிக்கை இன்று (செப்.1) காவல் துறைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று கூறிய சம்பவங்களின் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஹுடகேஷ்வர் காவல் துறையினர் போக்சோ மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 9 வீரர்கள் பலி!