தலைமை மருத்துவராகப் பணியமர்த்தப்பட்டுள்ள இவர், பொதுவான ஆண், பெண் பாலினத்தவரைப் போல திருநங்கைகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்போது, தாங்களும் மருத்துவராகி உயர் பொறுப்புகளை வகிக்க முடியும் என இதன் மூலம் நிரூபித்துள்ளார்.
தடையாக இருந்த குடும்பம், மதம்
தான் ஒரு திருநங்கை என்பதை சிறு வயதிலேயே உணர்ந்த அக்சா ஷேய்க், தன் 20ஆவது வயது முதல் திருநங்கையாக வாழத் தொடங்கியுள்ளார். இருப்பினும், அவரது புதிய அடையாளத்தை அனைவரையும் ஏற்க செய்ய அவர் பயணித்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல.
அவருக்கு வந்த ஆட்சேபனைகளை சமாளிக்க, அவர் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது குடும்பத்தினரும் அவரது விருப்பத்தை ஒப்புக் கொள்ளவில்லை. மதமும் ஒரு பெரும் தடையாக இருந்தது.
"சிலர் எனக்கு மனநல பிரச்சினை இருப்பதாக சித்தரிக்க முயன்றனர், சிலர் எனது மதத்திற்கு எதிராக நான் செயல்படுகிறேன் என்று சொன்னார்கள்" என புன்முறுவலோடு கூறுகிறார் மருத்துவர் அக்சா ஷேய்க்.
எனினும்கூட, தனது பாலின அடையாளத்தை நம்பிய அவர், தன் மீது வீசப்பட்ட அவச்சொற்களை எதிர்த்துப் போராடி, தன் புதிய வாழ்க்கையைத் தழுவி, தற்போது மகிழ்ச்சியுடன் மருத்துவ சேவை ஆற்றிவருகிறார்.
உங்கள் அடையாளத்தை உறுதியாக நம்புங்கள்
"நீங்கள் சமூகத்திலிருந்து பல அவச்சொற்களை எதிர்கொள்வீர்கள், ஆனால் உங்கள் அடையாளத்தை நீங்கள் உறுதியாக நம்பினால், நான் செய்ததைப் போலவே அவற்றை புறக்கணித்து நீங்களும் முன்னேறி செல்வீர்கள்" என்கிறார் உறுதியுடன்.
தன்னைப் போன்று வெளியே வந்து அடையாளங்களை தழுவ முடியாதவர்கள் குறித்து கவலைப்படும் அக்சா, "சமூகம் எங்களைப் புரிந்துகொண்டு எங்களை மதிக்கிறதென்றால், நாங்கள் நிறைய செய்ய முடியும், ஆனால் சமூகத்தின் அணுகுமுறை எங்களுக்கு எதிராக இருந்தால், எங்களைப் போன்றவர்களை நீங்கள் தெருக்களில்தான் காண்பீர்கள்" எனவும் கூறுகிறார்.
உச்ச நீதிமன்றம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இணைந்து 2019ஆம் ஆண்டு வெளியிட்ட நல்சா தீர்ப்பு, இன்றளவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அக்சா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு சமமாக பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆற்றில் வீசப்பட்ட திருநங்கை குழந்தை