மத்தியப் பிரதேசம்: சட்னா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவர் ஒருவர் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு மருத்துவர் ஒருவர் தனது மருத்துவக் குறிப்பில் இந்தியில் ’ஸ்ரீஹரி’ என எழுதியுள்ளார். சமீபத்தில், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை இந்தியில் வெளியிட்ட முதலமைச்சர் சௌகான் மருத்துவர்களை இனி மருத்துவக் குறிப்பில் ஸ்ரீஹரி என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதனை சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சர்வேஷ் சிங் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
கொடர் கிராமத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சர்வேஷ் சிங்மின் இந்த மருத்துவக் குறிப்பு சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மருத்துவர் சர்வேஷ் சிங் கூறுகையில், “கடந்த ஞாயிறு(அக்.16) அன்று நான் பணிபுரியும் அரசு மருத்துவமனைக்கு வந்த முதல் நோயாளி, தனக்கு வயிற்று வலி எனக் கூறினார். அவருக்கு எனது மருத்துவக் குறிப்பில், ‘RX' எனக் குறிப்பிடாமல் ’ஸ்ரீஹரி’ என்று எழுதி இந்தியிலேயே முழுவதையும் எழுதிக் கொடுத்தேன். அதில் நோயின் அறிகுறிகளை ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் இந்தியில் குறிப்பிட்டிருந்தேன். அது மக்களே மருத்துவக் குறிப்பை புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகவுள்ளது. இனி இதையே தொடரவும் உள்ளேன்” என்றார்
இதுகுறித்து அம்மருத்துவமனைக்கு வந்த ஓர் நோயாளி கூறுகையில், “இப்போது என்னால் மருத்துவர் குறிப்பில் என்ன எழுதிருக்கிறார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. எப்போது மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், மருந்துகளின் பெயர்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.