ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முடிவுகள் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. பிகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் பார்வை தென் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே ஆட்சியில் உள்ள நிலையில், தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஹைதராபாத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர். சாதாரண மாநகராட்சி தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதற்கு 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலே காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹைதராபாத்தில் அக்கட்சியின் தலைவர் ஓவைசிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பாஜக தலைவர்கள், ஓவைசி ஆகியோருக்கிடையே கடும் வார்த்தை போர் வெடித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் ஊடுருவல் மேற்கொண்ட பாகிஸ்தானிகளை விரட்ட பழைய ஹைதராபாத் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என பாஜக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய ஓவைசி, "பாகிஸ்தானிகள் ஊடுருவல் மேற்கொண்டால் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரே அதற்கு பொறுப்பு. பாகிஸ்தானிகள் நுழையும்போது அவர்கள் தூங்கி கொண்டிருந்தனரா? அப்படி இருந்தால் அது அவர்களின் தோல்வி. இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கிடையே வெறுப்புணர்வை பரப்ப அவர்கள் முயற்சிக்கின்றனர். முடிந்தால், மோடி வந்து இங்கு பரப்புரை மேற்கொள்ளட்டும். அவர்கள் எத்தனை தொகுதியில் வெற்றிபெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்" என்றார்.