டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான, நீதிபதிகள் எஸ். ரவிந்திர பட், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு காலை 10.30 மணி என்ற வழக்கமான நேரத்தைவிட, முன்னதாக காலை 9.30 மணியளவிலேயே தங்களின் வழக்கு விசாரணையை நேற்று (ஜூலை 15) தொடங்கியது.
இந்த அமர்வு, விரைவாக தங்களின் பணிகளை தொடங்கி, அன்றைய நாளின் வழக்குகளை விரைவாக முடித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன.
மேலும், இதுகுறித்து நீதிபதி லலித்,"நான் எப்போதும் சொல்வதுதான், நம் குழந்தைகளால் காலை 7 மணிக்கு எழுந்து பள்ளிக்கு செல்ல முடியும் என்றால், ஏன் நம்மால் காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வரமுடியாது?" என வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரை நோக்கி அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும், "நீதிமன்ற பணிகளை காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 11.30 வரையும், தொடர்ந்து அரைமணி நேர உணவு இடைவேளைக்கு பின்னர், 12 மணிக்கு தொடங்கினால், மதியம் 2 மணிக்கு தங்களின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்யலாம். இதனால், மாலையில் வேறு காரியங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்" என தெரிவித்தார்.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்வி ரமணா, அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ளார். அவரை தொடர்ந்து, நீதிபதி யு.யு. லலித், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹெலிபேட் கட்டினால் போதுமா? 'பள்ளிக்குழந்தைகளுக்காக சாலை வசதி ஏற்படுத்துங்கள்' - மும்பை உயர் நீதிமன்றம்!