மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்ததன் விளைவாக, அம்மாநிலத்தில் கமல்நாத் ஆட்சி கவிழிந்து பாஜக அரியணை ஏறியது. அக்கட்சியின் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சிந்தியாவுக்கு பாஜக, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியது. இந்நிலையில், இளைஞரணி காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியிலிருந்திருந்தால் அவர் முதலமைச்சராக ஆகியிருப்பார். தற்போது, பாஜகவில் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
தொண்டர்களுடன் சேர்ந்து கட்சியை வலுப்படுத்த அவருக்கு வாய்ப்பிருந்தது. ஒரு நாள், நீங்கள் முதலமைச்சராக வருவீர்கள் என அவரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் பாதை மாறி சென்றுவிட்டார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அவரால் அங்கு முதலமைச்சராக முடியாது. அதற்கு, அவர் இங்கு வர வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள சிந்தியா, "இப்போது இருக்கும் உங்களின் (ராகுல்) கவலை, நான் காங்கிரஸ் கட்சியிலிருந்தபோது இருந்திருந்தால் சூழ்நிலை வேறுமாறியாக இருந்திருக்கும்" என்றார்.