இந்தியாவில் செயல்பட்டுவரும் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். தென்கொரியா நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 5) பாகிஸ்தானில் இருக்கும் ஹுண்டாய் நிறுவனம் ட்விட்டரில் காஷ்மீர் தொடர்பாக பதிவு ஒன்றை இட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய பதிவு
இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பலரும் இந்தப் பதிவை மேற்கோள்காட்டி தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். அத்துடன் ஹுண்டாய் நிறுவனத்தை இந்தியர்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துவந்தனர்.
கடந்த பிப்ரவரி 5 அன்று @Pakistanhyundai என்னும் ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளை மேலும் கிளர்ச்சியாக்கும் வகையில், நமது காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூருவோம், சுதந்திரத்திற்கான அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் துணை நிற்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ட்விட்டரில் இந்தக் கருத்திற்கு எதிராக இந்தியர்கள் கருத்து தெரிவித்து ஹுண்டாய் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறி #BoycottHyundai என்னும் ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.
இது ஒருபுறமிருக்க கியா (KIA) நிறுவனமும் @KiaCrossroads என்னும் ட்விட்டர் பக்கத்தில் (உறுதிசெய்யப்படாத கணக்கு), ”காஷ்மீர் விடுதலைக்காக நாம் ஒற்றுமையுடன் இருப்போம்" தன் பங்கிற்கு கொளுத்திப்போட்டது. இந்தச் சர்ச்சையில் தானாகவே ஒட்டிக்கொண்ட கே.எஃப்.சி. நிறுவனமும் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே பாணியில் பதிவு ஒன்றை இட்டுள்ளது.
நாட்டை நாங்கள் மதிக்கிறோம்
இது குறித்து ஹுண்டாய் நிறுவனம், “எங்கள் நிறுவனத்தின் வணிகக் கொள்கையின்படி எந்தவித அரசியல், மதம் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்.
ஆகவே அந்தப் பதிவு ஹுண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது. இந்த காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் டீலர் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அது எங்களுடைய கவனத்திற்கு வந்தவுடன் நாங்கள் அதை நீக்கிவிட்டோம்.
மேலும் இந்திய நாட்டை நாங்கள் மதித்துவருகிறோம். அப்படி இருக்கும்போது தேவையில்லாமல் எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போடப்பட்ட ஒரு சமூக வலைதளப் பதிவிற்கு ஹுண்டாய் இந்தியாவைத் தொடர்புப்படுத்துவது மிகவும் தவறான ஒன்று.
இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். ஹுண்டாய் இந்தியா நிறுவனத்திற்கும் அந்த டீலருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆகவே இதற்கும் ஹுண்டாய் இந்தியாவிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை.
ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் நீண்ட நாள்களாகத் தொழில் செய்துவருகிறது. இந்தப் பதிவு தொடர்பாக இந்திய மக்களின் உணர்வுகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் அதற்கு நாங்கள் வருந்துகிறோம். எப்போதும் இந்திய மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு