தெலங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மாநகராட்சியின் 150 வார்டுகளில் ஆயிரத்து 122 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஹைதராபாத் மாநகராட்சி மேயர், உறுப்பினர்கள் பதவியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.
இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி நடைபெற்றுவருகிறது. தேர்தல் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான விரிவாக ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 150 இடங்களில், பாஜக 85 இடங்களிலும், ஆளும் டிஆர்எஸ் கட்சி 29 இடங்களிலும், ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி 17 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. அரசியல் களத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பரப்புரையில் உள் துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட, கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்தத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும்' - வடமாநில விவசாயிகள் உறுதி