ஐதராபாத்: சீக்கியர்களுக்கு என தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பிரிவான வாரீஸ் பஞ்சாப் டி-யைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பஞ்சாப் போலீசார் கடந்த சனிக்கிழமை இவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது அம்ரித் பால் சிங் போலீசாரிடம் இருந்து தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஞ்சாப்பில் பதற்ற நிலையில் ஏற்பட்டது. அம்ரித் பால் சிங் மற்றும் பஞ்சாப்பின் பாதுகாப்பு சூழல் குறித்து வதந்தி பரவுவதை தடுக்க பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நாளை (மார்ச். 21) வரை இணைய சேவை முடக்கத்தை அதிகாரிகள் விரிவுபடுத்தினர். மேலும் முக்கிய நகரங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதராவாளர்கள் தூதரகம் மீது கற்களை வீசினர்.
மேலும் தூதரகம் முன் இருந்த இந்திய தேசியக் கொடியை அகற்றினர். இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது.
தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது இங்கிலாந்து அரசு கைது மற்றும் வழக்கு தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக" தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய தூதரக கட்டடத்தின் மேல் ராட்சத தேசியக் கொடியை அதிகாரிகள் வைத்து உள்ளனர்.
லண்டனில் ஆல்ட்விச் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது ராட்சத தேசியக் கொடி தொங்கவிடப்பட்டு உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அம்ரித் பால் சிங் கைது? - பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் - என்ன நடந்தது?