பெங்களூரு(கர்நாடகா): கர்நாடகாவின் வணிக மையமாக விளங்கிய "ஹூப்ளி", வர்த்தக நகரம் என்றும்; குட்டி மும்பை என்றும் அழைக்கப்பட்டது. வர்த்தகத்திற்கு பெயர் போன இந்த நகரம், தற்போது காற்றுமாசு அதிகரிப்பால், "புழுதி நகரம்" என்ற பெயரை பெற்றுள்ளது.
காற்றின் தரத்தை ஆய்வு செய்யும், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐக்யூ ஏர் (IQAir) என்ற நிறுவனம், கர்நாடக மாநிலத்தின் காற்று மாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவிலேயே ஹூப்ளி நகரத்தில்தான் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகம் காணப்படும் நகரங்கள் பட்டியலில், ஹூப்ளி முதலிடத்தில் உள்ளது. யாதகிரி இரண்டாவது இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும், பெலாகவி நான்காவது இடத்திலும், சிக்கபள்ளபூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஹூப்ளியுடன் ஒப்பிடுகையில், மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பெங்களூருவில் காற்றுமாசு சற்று குறைந்தே காணப்படுகிறது.
ஹூப்ளியில், வளர்ச்சிப் பணிகளுக்காக சாலைகளையும், நிலப்பரப்பையும் கைப்பற்றும் அதிகாரிகள், பல திட்டங்களை அறைகுறையாக கிடப்பில் போட்டுள்ளதாகவும், அதனால் நகரத்தின் பல இடங்கள் புழுதிக்காடாக மாறியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக ஹூப்ளி மாவட்ட ஆட்சியர் நிதிஷ் பாட்டீலை தொடர்பு கொண்டு கேட்டபோது, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் போது, காற்றுமாசு போன்ற பிரச்னைகள் வருவது இயல்புதான் என்றும், கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.